லிட்சி பழம் சாகுபடி!

லிட்சி Lychee fruit tree plant

மித வெப்ப மண்டலப் பகுதியில் வளரக்கூடிய பழ மரங்களில் லிட்சி மரம் முக்கியமானது. இம்மரம், சேப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் லிட்சி ஸைனன்சிஸ் ஆகும்.

இவ்வகை மரங்கள் 11 மீட்டர் உயரம் வரை வளரும். அதிகக் கிளைகளுடன், வட்ட வடிவில், என்றும் பசுமையாக இருக்கும். லிட்சியின் தாயகம் சீனாவாகும். உலகளவில் லிட்சி உற்பத்தியை எடுத்துக் கொண்டால், சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில், பீஹார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக விளைகிறது.

வணிகம்

ஓராண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே லிட்சி பழங்கள் விளையும் என்பதால், இவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப, கீழ்ப்பழனி மலையில் லிட்சி உற்பத்தி ஆண்டுக்கு இருமுறை, அதாவது, டிசம்பர் – ஜனவரி, ஜூன் – ஜூலையில் விளையும் என்பதால், இப்பகுதி விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் அதிக வருவாயைப் பெறலாம். உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோ பழங்கள் 70-120 ரூபாய் வரையும், வெளிநாட்டுச் சந்தையில் 210-275 ரூபாய் வரையும் விற்கப்படுகின்றன.

பயன்கள்

லிட்சி பழத்தை அப்படியே உண்ணலாம். இந்தப் பழத்திலிருந்து உயர்தர ஸ்குவாஷ் வகைகளைத் தயாரிக்கலாம். ஊறுகாய் மற்றும் பழரசமும் தயாரிக்கலாம். இரண்டு மாதங்கள் மட்டுமே இந்தப் பழங்கள் கிடைக்கும் என்பதால், இவற்றை கேனிங் அல்லது டீகைடிரேசன் மூலம் சேமித்து வைத்து விற்பனை செய்யலாம்.

சாகுபடி உத்திகள்

மண் மற்றும் தட்ப வெப்பநிலை: லிட்சி பழமரம் எல்லா வகை மண்ணிலும் நன்கு வளரும். ஆயினும், ஆழமான, வடிகால் வசதியுள்ள கரிசல் மண் மிகவும் ஏற்றது. மண்ணின் அமிலத்தன்மை 5 முதல் 7 வரை இருக்க வேண்டும். அங்ககச் சத்து நிறைந்த நிலமாகவும் இருப்பது நல்லது.

இரகங்கள்

ஷாகி, சுவர்ண ரூப்பா, சைனா, காஸ்பா, இலைச்சி, புர்பி, ஏர்ளி சீட்லெஸ் ரோஸ் செனட், பாமபேய், கல்கத்தா, லேட்சீட்லெஸ், டெகராடூன், குழாபி, லேட் லார்ஞ் ரெட்.

நடவு

லிட்சி கன்றுகளை விண்பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். 60-70 நாட்களில் இந்தப் பதியன்கள் நடவுக்குத் தயாராகி விடும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடலாம். குழிகளை 10×8 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். குழியெடுத்து 15-20 நாட்கள் கழித்து, ஒரு குழிக்கு 20-25 கிலோ தொழுவுரம், 2 கிராம் எலும்புத் தூள் மற்றும் 300 கிராம் பொட்டாஷ் வீதம் இட வேண்டும்.

கவாத்து

லிட்சி மரங்களை வடிவமைத்தல் மிகவும் அவசியம். கன்றுகள் ஒரு மீட்டர் வளரும் வரை பக்கக் கிளைகளை நீக்க வேண்டும். பின்பு, வீரியமிக்க மூன்று கிளைகளை மட்டும் வளர விட வேண்டும். கிளைகளின் வளர்ச்சி அதிகமாக இருந்தால், அது மகசூலைப் பாதிக்கும். எனவே, அத்தகைய கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும்.

நுண்ணுயிர் உர மேலாண்மை

லிட்சியின் வளர்ச்சிக்கு நுண்ணுயிர் உரம் பெரிதும் பயன்படும். இதற்கு ஏற்றது வேர் உட்பூசணம் ஆகும். இது, ஆங்கிலத்தில் VAM என்று அழைக்கப்படும். இந்த நுண்ணுயிரி Vermiculite எனப்படும். இதை, வெண் களிமண்ணில் கலந்து பயிர்களுக்கு இட வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்

லிட்சி பல்லாண்டு மரமாகும். காய்ப்பு 6-10 ஆண்டுகளில் தொடங்கும். விண் பதியன் கன்று மரங்கள் 5-6 ஆண்டுகளில் மகசூலைத் தரும். பூக்கள் பூத்ததில் இருந்து 70-100 நாட்களில் பழங்களை அறுவடை செய்யலாம். சராசரியாக மரத்துக்கு 40 முதல் 100 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். இது, இரகம், பருவம், இடம், சத்துகள் மற்றும் வயதைப் பொறுத்து மாறுபடும். இப்பழங்கள் மார்ச்- ஜூன் காலத்தில் அறுவடைக்கு வரும்.

அறுவடைக்குப் பிந்தைய உத்திகள்

லிட்சி பழங்கள் மரத்திலேயே பழுத்து விடும் தன்மை மிக்கவை. எனவே, இவற்றின் வைப்புத் திறன் குறைவாகவே இருக்கும். அதனால், இந்தப் பழங்கள் முழுமையாகப் பழுப்பதற்கு முன்பே, அதாவது, இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் போதே, அறுவடை செய்து விட வேண்டும்.


லிட்சி JEYAVALLI

முனைவர் இரா.ஜெயவள்ளி, உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைப் பழவியல் துறை, மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி – 620 027.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading